Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர்களின் ஊதியம் பாதியாகக் குறைக்கப்படுமா? - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதில்!

ஆசிரியர்களின் ஊதியம் பாதியாகக் குறைக்கப்படுமா? 

- பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதில்!

ஓராண்டாக வேலையின்றி உள்ள பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தைப் பாதியாகக் குறைத்து, கரோனா முன்களப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவும் நிலையில், பள்ளிக் கல்வித்துறை ஏதேனும் திட்டம் வைத்துள்ளதா? என்ற கேள்விக்கு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று பதில் அளித்தார்.
மணப்பாறை அரசு மருத்துவமனை, அரியமலங்கலம் குப்பைக் கிடங்கு, சத்திரம் பேருந்து நிலையம் விரிவாக்கப் பணி ஆகியவற்றைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இன்று (மே 20) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறுகையில், "சத்திரம் பேருந்து நிலையம் விரிவாக்கப் பணிகள் 2 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. முதல் கட்டப் பணிகள் ஜூன் மாத இறுதியில் நிறைவடையும் என்றும், 2-ம் கட்டப் பணிகள் 3 மாதங்களிலும் நிறைவடையும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடத்தை ஆணையராக மாற்றியது தொடர்பாக, பல்வேறு தரப்பில் இருந்தும் வரப்பெற்ற கருத்துகளை முதல்வர் பரிசீலித்து உரிய முடிவை அறிவிப்பார்.

கரோனா தொற்று குறைந்த பிறகே, பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படும்" என்றார்.

ஓராண்டாக வேலையின்றி உள்ள ஆசிரியர்களின் ஊதியத்தைப் பாதியாகக் குறைத்து, கரோனா முன்களப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று கருத்துகள் பரவி வரும் நிலையில், பள்ளிக் கல்வித்துறைக்கு ஏதேனும் திட்டம் உள்ளதா? என்ற கேள்விக்கு, "இது தொடர்பாக நானும் சமூக வலைதளத்தில் பார்த்தேன். இதுகுறித்து, முதல்வருடன் ஆலோசித்து, அவர் கூறும் ஆலோசனையின்படி அறிவிக்கப்படும்" என்றார்.
அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  கூறும்போது, "அரியமங்கலம் குப்பைக் கிடங்கு பிரச்சினை தொடர்பாக, சட்டப்பேரவையில் பல முறை பேசியுள்ளேன். அரியமங்கலம் குப்பைக் கிடங்கு பிரச்சினைக்கு ஓராண்டுக்குள் தீர்வு காணப்படும்" என்றார்.

முன்னதாக, மணப்பாறை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பிறகு, செய்தியாளர்களிடம் கூறும்போது, "தேர்தல் முடிந்த பிறகு வாக்கு எண்ணிக்கை வரை கிடைத்த நாட்களை, கரோனா பரவலைத் தடுக்க முந்தைய காபந்து அரசு சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து ஒரு மாதம்கூட ஆகவில்லை. கரோனா பரவலைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தொலைநோக்குப் பார்வையுடன் தீவிரமாகக் களப் பணியாற்றி வருகிறது. நகர்ப்புறங்களில் நடத்தப்படுவதுபோல், கிராமப்புறப் பகுதிகளிலும் காய்ச்சல் முகாம் நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, கரூர் எம்.பி. எஸ்.ஜோதிமணி, எம்எல்ஏக்கள் மணப்பாறை பி.அப்துல்சமது, திருச்சி கிழக்கு எஸ்.இனிகோ இருதயராஜ், மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments