Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து 1 வருடம் நிறைவு! தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டின் நிலை?

பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து 1 வருடம் நிறைவு! தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டின் நிலை?

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு ஓராண்டு நிறைவு; ஆன்லைன் கல்வி மாணவர்களுக்கு கைகொடுத்ததா?
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவுபெற்று விட்டது. இந்த காலகட்டத்தில் வழங்கப்பட்ட ஆன்லைன் வழிக்கல்வி மாணவர்களுக்கு கைகொடுத்ததா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை
கொரோனா கோரத்தாண்டவம் தொடங்கிய நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதிக்கு பிறகு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அந்த நேரத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது. கடைசித்தேர்வு கொரோனா தொற்றுக்கு மத்தியில் நடத்தப்பட்டதால், சில மாணவர்கள் தேர்வை எழுத முடியாமல் போனதாக தகவல் வெளியானது.அதையடுத்து அந்த மாணவர்களுக்கு தனியாக தேர்வும் நடத்தப்பட்டது. மேலும் பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, அவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. இவ்வாறாக பொதுத்தேர்வு அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பிற மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆன்லைன் கல்வி கைகொடுத்ததா?
இப்படியாக கடந்த கல்வியாண்டு கொரோனாவால் கரைந்து போனது. அடுத்த கல்வியாண்டாவது எந்த அவதியும் இல்லாமல் தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் தொற்றின் தாக்கம் தீவிரமானதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது.பள்ளிகள் மூடப்பட்டாலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில், ஆன்லைன் வழிக் கல்விமுறையை மத்திய-மாநில அரசுகள் கொண்டு வந்து, கடந்த ஓராண்டாக அம்முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் ஆன்லைன் வகுப்புகள் சரியாக நடத்தப்பட்டாலும், அரசு பள்ளிகளில் அத்தி பூத்தாற்போலவே ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆக இந்த ஆன்லைன் வழிக்கல்வி பெருமளவில் மாணவர்களுக்கு கைகொடுத்ததா என்றால், பலருடைய பதில், ‘இல்லை’ என்பதாகவே இருக்கிறது. மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் தரப்பில் மட்டுமல்ல, ஆசிரியர்கள் தரப்பிலும் அதே பதில்தான் வருகிறது.
ஓராண்டு நிறைவு
ஆன்லைன் வழிக் கல்வி, கல்வி தொலைக்காட்சி, நேரடி வகுப்புகளில் பங்குபெற்றவர்களில், 12-ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் தற்போது பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருக்கின்றனர்.இந்நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றிருக்கிறது. எப்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும், நண்பர்களோடு சகஜமான வகுப்பறை வாழ்க்கை எப்போது மீண்டும் கிடைக்கும் என்ற ஆவலில் மாணவர்களும், வீட்டில் அடங்காமலும், படிக்காமலும் விளையாட்டுத்தனமாக இருக்கும் பிள்ளைகளுக்கு எப்போதுதான் பள்ளிகள் திறக்கும் என்ற எதிர்பார்ப்பில் பெற்றோர்களும் இருந்தாலும், தற்போது கொரோனா மீண்டும் மிரட்டுவது, பள்ளிகள் திறப்பை மேலும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
மழலையர் வகுப்புகளுக்கு அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் நடத்துவது சந்தேகம் என்று ஏற்கனவே சில பள்ளிகள் மறைமுகமாக தெரிவித்துவிட்டன. இதே நிலை நீடித்தால் மற்ற மாணவர்களுக்கான வகுப்புகளும் கடந்த கல்வியாண்டை போலவே ஆன்லைன் வாயிலாகவே தொடரக்கூடும்.

Post a Comment

0 Comments